மேலும்

நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்குமாறு கோத்தாவுக்கு சபாநாயகர் உத்தரவு

chamal-rajapakshaஇந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவதாக, கடந்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இதுகுறித்து விளக்கம் கேட்டு, சிறிலங்கா நாடாளுமன்றத்தில், ஐதேக உறுப்பினர் தலதா அத்துகோரள கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் கூற்று உண்மையா, அவ்வாறாயின், என்னென்ன ஆயுதங்களை சிறிலங்கா இந்தியாவுக்கு விற்கப்பட்டது, எந்த இடத்தில், எப்போது விற்கப்பட்டது, அதற்காக நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன, அதற்குரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அவர் 11 மாதங்களுக்கு முன்னர் எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

நேற்று நான்காவது முறையாக இதுபற்றிக் கேள்வி எழுப்பியிருந்தார் தலதா அத்துகோரள.

இந்தக் கேள்விக்கு இதுவரை அரசதரப்பு பதிலளிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், மேலும் ஒரு மாத காலஅவகாசம் தரும்படி, நேற்றும் கேட்டுக்கொண்டார் அரசதரப்பு பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்த்தன.

அதற்கு, ஐதேக உறுப்பினர் தலதா அத்துகோரள தான் 4 தடவைகள் கேள்வி எழுப்பியும் பதிலளிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக சபாநாயகரிடம் முறையிட்டார்.

இதையடுத்து, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை இதுகுறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *