மேலும்

அகதிகளை பலவந்தமாக திருப்பி அழைக்கமாட்டோம் – முதல்வர் விக்னேஸ்வரன்

CMதமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை பலவந்தமாக தாயகத்துக்கு திருப்பி அழைக்கப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை, இந்தியா திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கோரியிருந்தார்.

நேற்று சிறிலங்கா திரும்பிய அவர், பிபிசிக்கு அளித்துள்ள செவ்வியில், இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ளவர்கள், தாயகம் திரும்ப வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், அகதிகளைத் தாம் பலவந்தமாக திருப்பி அழைக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

“போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய, இலங்கை அரசுகளுடன் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.

இதுதொடர்பாக, இந்தியாவுடன் வடக்கு மாகாணசபை ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள மக்களின் காணிகள் சிங்களக் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் தாயகம் திரும்ப வேண்டியது முக்கியமானது.

இருப்பினும் அவர்கள் சொந்த இடங்களுக்கு, நம்பிக்கையோடு திரும்பி வருவதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

அவர்கள் எவரையும் பலாத்காரமாக நாடு திரும்பச் செய்யப் போவதில்லை.

அதேநேரம், வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியதன் பின்னரே, 13 வது திருத்தச்சட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் தெரியவந்திருக்கிறது.

தமிழ்மக்களின் சார்பில் சிறிலங்கா – இந்திய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்களுடன் வாழத்தக்க வகையில் அந்தத் திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ட பயணம் அரசியல் சார்ந்ததல்ல.

அதனால், அங்குள்ள அரசியல்வாதிகளையோ அரச முக்கியஸ்தர்களையோ நான் சந்திக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *