மேலும்

மோடி – மகிந்த தொலைபேசிப் பேச்சு உண்மையா? – கிளம்பும் சந்தேகங்கள்

modi-mahindaசிறிலங்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் விடுதலை குறித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியது உண்மையா என்ற சந்தேகம், மீனவர்கள் மத்தியில் வலுப் பெற்றுள்ளது.

மீனவர்களின் விடுதலை குறித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசியதாகவும், மீனவர்களை இந்தியச் சிறைக்கு மாற்ற மகிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டதாகவும், சுப்பிரமணியன் சுவாமி நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.

சிறிலங்கா அதிபர் செயலகமும் இதனை உறுதி செய்திருந்தது.

எனினும், இந்திய மத்திய அரசாங்கம் இதுகுறித்து எந்த கருத்தையும் வெளியிடாதது இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமி தமிழ்நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பை அடங்குவதற்காக முயற்சிக்கிறாரா என்ற சந்தேகம் இதனால் எழுந்துள்ளது.

நேற்று இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியில், நடந்த மீனவப் பெண்களின் பேரணி ஒன்றின் பின்னர் கருத்து வெளியிட்ட பிரதிநிதி சேசு, சுப்பிரமணியன் சுவாமி தமது போராட்டத்தை சீர்குலைக்க முற்படுவதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு எந்தக் கருத்தையும் வெளியிடாததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, நேற்று புதுடெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அதிபருக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையிலான தொலைபேசியில் உரையாடல் குறித்த செய்தியை, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ மறுத்து விட்டார்.

இதுகுறித்து இப்போதைக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று அவர் பதிலளித்துள்ளார்.

“ஐந்து இந்திய மீனவர்களை இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையுமே நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

நாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு ஒரு சுமூகமான தீர்வு இதுவரை கிட்டவில்லை.

இது ஒரு முக்கியமான, சிக்கலான, உணர்வுபூர்வமான விவகாரம்.

இதில் நாங்கள் ஒரு சுமூகமான தீர்வை எட்டிய பிறகு நாங்கள் அதைப் பற்றி அனைவருக்கும் தெரிவிப்போம்” என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் இந்தக் கருத்தினால் மீனவர்கள் மத்தியில் சந்தேகம் இன்னும் வலுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *