மேலும்

சிறிலங்கா வரும் சீன நீர்மூழ்கிகளை அமெரிக்காவும் கண்காணிப்பு

malabar-exசிறிலங்காவில் சீன நீர்மூழ்கிகள் தரிக்கத் தொடங்கியுள்ளதை இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படைகள் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில், சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதையடுத்து, இந்திய, அமெரிக்க கடற்படையினர் இணைந்து நடத்தும் கூட்டுப் பயிற்சியை மேலும் விரிவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, இருநாட்டுக் கடற்படைகளும், இணைந்து மேற்கொள்ளும் மலபார் போர்ப்பயிற்சியில், அணுசக்தி நீர்மூழ்கிகள் மற்றும் விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் பல நாடுகளையும் இந்தப் பயிற்சியில் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிகளின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ளது குறித்து அமெரிக்காவும் இந்தியாவும் கவலை கொண்டுள்ளன.

இருநாட்டுக் கடற்படைகளும் இதனை எச்சரிக்கையுடன் அவதானித்து வருகின்றன.

சிறிலங்கா துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி தரித்து நிற்பதற்கு அனுமதி வழங்கியதற்கு அண்மைய வாரங்களில், இரண்டு முறை இந்தியா தனது ஆழ்ந்த அதிருப்தியை சிறிலங்காவிடம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு கடற்படைப் பயிற்சிகளை விரிவாக்குவது குறித்து இந்திய, அமெரிக்க அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக, நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வொசிங்டனில், நடந்த பாதுகாப்பு கொள்கைக் குழுக் கூட்டத்திலும், இதுகுறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் தொடர்ச்சியாக, முதலில், மலபார் போர்ப்பயிற்சியில் அணுசக்தி நீர்மூழ்கி மற்றும் விமானந்தாங்கிக் கப்பல்களை இணைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இருதரப்பும், கடற்படைப் போர்ப்பயிற்சியில், இராணுவம், விமானப்படைப் பிரிவுகளையும் இணைத்துக் கொள்வது குறித்தும் இருநாடுகளும் கவனம் செலுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *