மேலும்

நடுக்கடலில் சிங்கப்பூர் கப்பல் மீட்ட ஏழு தமிழ் அகதிகளைப் பொறுப்பேற்றது பிறேசில்

Brazilஐக்கிய அரபு குடியரசின்  ஜெபல் அலி துறைமுகத்தில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்த ஏழு இலங்கைத் தமிழ் அகதிகளை பிறேசில் பொறுப்பேற்றுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இந்தியாவில் இருந்து 45 பேருடன் அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்ட படகு ஒன்று நடுக்கடலில் இயந்திரக் கோளாறினால் பழுதடைந்தது.

இந்தப் படகில் இருந்தவர்களைக் காப்பாற்றிய சிங்கப்பூர் கப்பல் ஒன்று, அவர்களை ஐக்கிய அரபுக் குடியரசில் ஒப்படைத்தது.

இவர்களை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம் அகதிகளாக அங்கீகரித்து, வேறு நாடுகளில் குடியமர்த்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டது.

இதற்கமைய, அமெரிக்கா, பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளை ஏனைய அகதிகளை ஏற்றுக் கொண்ட நிலையில், நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என ஏழு பேர் மட்டும் எஞ்சியிருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐக்கிய அரபுக் குடியரசில் ஜெபல் அலி துறைமுகத்தில் தங்கியிருந்த இவர்களை பிறேசில் ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளது.

இதையடுத்து, ஏழு தமிழ் அகதிகளும் வரும் திங்கட்கிழமை இரவு டுபாய் விமான நிலையத்தில் இருந்து பிறேசிலின் சாவோபோலோ விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக, ஐ.நா அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஏழு அகதிகளுக்கும், பிறேசில் அரசாங்கம் தங்குவதற்காக வீடுகளையும் பிற வசதிகளையும், வேலைவாய்ப்பையும் பெற்றுக் கொடுப்பதற்கும், போர்த்துக்கீசிய மொழியைக் கற்பதற்கும் வசதிகளைச் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *