மேலும்

சீனாவின் ‘புதிய பட்டுப்பாதை’ : அனைத்துலக வல்லாதிக்கத்திற்கான சவால்

thediplomat imageஇந்திய மாக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளான பூட்டான், சிறிலங்கா மற்றும் நேபாளம் போன்றவற்றில் சீனாவின் செல்வாக்கு கையோங்குவதன் மூலம் இப்பிராந்தியத்தில் சீனா வலுமிக்கதாக மாறிவிடுமோ என இந்தியா அச்சப்படுகின்றது.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Shannon Tiezzi எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

கிழக்கு ஆசியாவை ஐரோப்பாவுடன் இணைப்பதற்கான மிகப் பாரிய வர்த்தக மற்றும் கட்டுமான வலைப்பின்னல் திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக 2013ல் சீன அதிபர் Xi Jinping  தகவல் வெளியிட்டார். புதிய பட்டுப் பாதை [New Silk Road]  மற்றும் கடல்வழிப் பட்டுப் பாதை [Maritime Silk Road] ஆகியவையே இவ்விரு திட்டங்களாகும். சீன அதிபர் இத்திட்டங்கள் தொடர்பான தகவலை வெளியிட்டு ஓர் ஆண்டிற்குள் இவற்றை அமுல்ப்படுத்துவதில் சீன அரசாங்கம் முனைப்பும் ஆர்வமும் காண்பித்தது. தனது அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய இடத்தில் தனது நிதியைச் செலவிடுதல் அவசியமானது என்பதை சீனாவின் இந்த நகர்வு உறுதிப்படுத்தியது.

திட்டமிடப்பட்ட பட்டுப் பாதை பொருளாதார அபிவிருத்தியின் ஒரு பகுதியாக சீன மாகாணங்களில் தொடரூந்துப் பாதைகள், வீதிகள் மற்றும் நீர்க்குழாய்கள் போன்றவற்றை நிர்மாணிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் 16.3 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதென சீனா தீர்மானித்துள்ளதாக சீன அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி Bloomberg ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தியை சீன அரசின் ‘சீன டெய்லி’ தனது ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவால் மிகப் பெரியளவில் முதலீடு செய்யப்பட்டு மேற்கொள்ளப்படும் இவ் அபிவிருத்தித் திட்டமானது சீனாவின் பின்தங்கிய பிரதேசங்களை முன்னேற்றுவதை நோக்காகக் கொண்டாலும், புதிய பட்டுப் பாதைத் திட்டத்தை முழுமைப்படுத்துவதே இதன் பிரதான நோக்காகும்.

இதேவேளையில், இத்திட்டத்திற்குள் உள்ளடங்கும் நாடுகளுக்கு சீன வங்கிகள் கடனாக நிதியை வழங்குவதற்கான உந்துதலை அளிப்பதென்பதுவும் சீனாவின் கோட்பாடாகும். பட்டுப் பாதைத் திட்டத்தில் சீனாவின் பங்காளி நாடுகளுக்கு ஏற்கனவே நிதி வழங்கப்படும் என சீனாவால் உறுதியளிக்கப்பட்டது. இந்தவகையில், சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்திக்காக 1.4 பில்லியன் டொலர்களும், மத்திய ஆசியாவின் கட்டுமான மற்றும் சக்தி அபிவிருத்திக்காக 50 பில்லியன் டொலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு பொது உதவியாக 327 மில்லியன் டொலர்களும் வழங்குவதாக சீன அறிவித்திருந்தது என சீன டெய்லி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுதவிர, சீனாவின் புதிய ஆசிய கட்டுமான முதலீட்டு வங்கியானது ஆசிய நாடுகளின் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக மேலும் நிதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பட்டுப் பாதைத் திட்டமானது முழுமையாக நிறைவடையும் போது 21.1 றில்லியன் டொலர்கள் செலவாகும் என ‘வோன்ற் சீன ரைம்ஸ்’ கணிப்பிடுகிறது.

சீனா ஆரம்பத்தில் தனது பட்டுப் பாதைத் திட்டத்தில் குறிப்பிடாத சில இடங்களை கடந்த ஆறு மாத காலத்தில் இணைத்துள்ளதாக சீன ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அதாவது மொஸ்கோ, ரஸ்யா: டுசன்பே, ரஜிகிஸ்ரான்: ஜகற்றா, இந்தோனேசியா: கொழும்பு, சிறிலங்கா போன்றனவே சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் இடங்களாகும். இதற்கப்பால் சீனா தற்போதும் தனது முக்கிய பங்காளி நாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அண்மையில் ஆப்கான் அதிபர் அஸ்ராப் கானி சீனாவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டமையும் பட்டுப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பட்டுப் பாதைத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பெரும்பாலான பிராந்திய நாடுகள் தமது மக்களின் முன்னேற்றத்திற்காக சீனாவின் நிதியுதவியைப் பெறுவதில் ஆர்வங்காட்டுகின்றன. ‘ஒரு நாடு செல்வந்த நாடாக மாறுவதற்கு முன்னர் அதன் வீதிகள் சிறப்புற செப்பனிடப்பட்டிருக்க வேண்டும்’ என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லீ அண்மையில் ஊடக மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

உலகின் முன்னணி நாடுகளில் சீனா மட்டுமே அனைத்துலக உதவி வழங்குவதற்குத் தயாராகவுள்ள நாடாக இருக்கலாம். சீனாவின் இப்போக்கானது மத்திய ஆசிய நாடுகள், இந்திய மாக்கடல் நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் உள்ள அதிகாரவலுமிக்க நாடுகள் சீனாவுடன் ‘ஏலப்போரை’ மேற்கொள்வதற்கான வழியை உருவாக்கலாம். இந்த நாடுகள் சீனாவின் நிதியுதவியானது இராஜதந்திர நோக்கைகக் கொண்டதேயன்றி வேறொன்றுமல்ல எனக் கூறலாம். எடுத்துக்காட்டாக, இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளான பூட்டான், சிறிலங்கா மற்றும் நேபாளம் போன்றவற்றில் சீனாவின் செல்வாக்கு கையோங்குவதன் மூலம் இப்பிராந்தியத்தில் சீனா வலுமிக்கதாக மாறிவிடுமோ என இந்தியா அச்சப்படுகின்றது என்பதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

சீனாவைப் பொறுத்தளவில் புதிய பட்டுப் பாதை மற்றும் கடல் சார் பட்டுப்பாதை போன்றன சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும், தனது மென்மையான பக்கத்தைக் காண்பிப்பதற்குமான வாய்ப்பாகவே காணப்படுகின்றன. சீனா பெருந்தொகையான நிதியை பிராந்திய நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் அந்த நாடுகள் சீனா தமக்கு எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை மென்போக்கையே கடைப்பிடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதன்மூலம் சீனாவானது மென்போக்காக நடக்கும் அதேவேளையில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கையும் அதிகரிப்பதற்கான ஏதுநிலைகள் தோன்றுகின்றன.

சீனாவின் பொருளாதார வலு தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. சீனாவானது தனக்கான நல்வாய்ப்பாகக் காணப்படும் தனது நிதிவளத்தைப் பயன்படுத்தி வெளியுறவுச் செல்வாக்கை வலுப்படுத்துதை தனது நல்வாய்ப்பாகக் கருதுவது இயற்கையானதாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவால் அமுல்படுத்தப்பட்ட மார்சல் திட்டத்துடன் சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை சிலர் ஒப்பீடு செய்கின்றனர். இவ்விரு வாய்ப்புக்களின் போதும், அதிகரித்து வரும் பிராந்திய அதிகார சக்தியானது தனது பொருளாதாரப் பலத்தைப் பயன்படுத்தி தனது வெளியுறவு இலக்குகளை அடைய விரும்புகின்றன. தனது நாட்டின் பொருளாதாரத்தையும் இதன்மூலம் வலுப்படுத்துவதே இதன் அடிப்படை நோக்காகும். அமெரிக்காவின் மார்சல் திட்டமானது அனைத்துலக அரங்கில் அமெரிக்கா ஒரு வல்லரசாகத் திகழ்வதற்கு உதவியது. இதேபோன்று சீனாவும் தனது இரண்டு பட்டுப் பாதைத் திட்டங்களின் மூலம் அனைத்துலக வல்லாதிக்க சக்தியாக வருவதற்கான சவாலை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *