போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்க முனைகிறது சிறிலங்கா – ஐ.நா குற்றச்சாட்டு
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்கும் சிறிலங்காவின் முயற்சி, அரசாங்கத்தின் நேர்மையின் மீது கேள்விகளை எழுப்புவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல்- ஹூசெய்ன் விசனம் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணையை சீர்குலைக்கும் சிறிலங்காவின் முயற்சி, அந்த விசாரணையை தோற்றுவித்த ஐ.நா அமைப்பின் ஆணையை அவமதிப்பதாகவும் உள்ளது.
போரின் போது அரசாங்கப் படைகள் மற்றும் தமிழ்ப் போராளிகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும், ஐ.நா விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்க மறுத்து விட்டது.
விசாரணையில் சாட்சியமளிக்க விரும்பிய சாட்சிகளையும் மிரட்டியது.
சிறிலங்கா அரசாங்கம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டது, அதன் நேர்மை மீது கேள்வியை எழுப்புகிறது.
எதற்காக ஒரு அரசாங்கம் சுதந்திர விசாரணையை கெடுக்க வேண்டும்?
ஐ.நா விசாரணைகளுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது மற்றும் மிரட்டுவது ஆகிய நடவடிக்கைகள், ஐ.நா பிரகடனத்தை நிலைநிறுத்த விளையும் உறுப்பு நாடு என்ற வகையில் ஏற்க முடியாத ஒன்று.
சிறிலங்காவில் இறுதிப் போரில் இரு தரப்பினரும் சர்வதேச சட்டங்களை கடுமையாக மீறியதாக பரந்துபட்ட குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில், சிறிலங்கா அங்கு ஒரு சுதந்திரமான விசாரணை நடைபெறுவதை தொடர்ச்சியாக தடுத்து வருகிறது.
சிறிலங்காவின் சிவில் சமூக அமைப்புக்களும், மனித உரிமைக் காவலர்களும், தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு, துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதுடன், ஏனைய வகையிலான மிரட்டல்களையும் எதிர்கொள்கின்றனர்.
அங்கு உருவாக்கப்பட்டுள்ள பயத்தினாலான சுவர், ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மக்கள் சாட்சியமளிப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி தடுக்கிறது.
இந்த விசாரணை நேர்மையற்றது என்றும், பாரபட்சமானது என்றும் சிறிலங்கா அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தவறானது.
இந்த விசாரணை தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.