மேலும்

இரண்டாவது தடவையாகவும் கொழும்பில் சீன நீர்மூழ்கி : ‘வழக்கத்துக்கு மாறானது’ – கேணல் ஹரிகரன்

சீன நீர்மூழ்கிகளின் தொடர்ச்சியான கொழும்பு வருகை புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா ஏற்கனவே தெரிவித்த அதிருப்தியை மீறி, இரண்டாவது தடவையாக சீன நீர்மூழ்கி ஒன்றுக்கு சிறிலங்கா அனுமதி அளித்துள்ளது.

கடந்தமாதம் 31ம் நாள் கொழும்பு வந்த சீன நீர்மூழ்கி, வரும் 6 ம் நாள் வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ளது.

எரிபொருள் நிரப்பவும், மாலுமிகள் ஓய்வெடுக்கவுமே, சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்திருப்பதாகவும், இது வழக்கத்துக்கு மாறான ஒன்று அல்ல எனவும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

ஆனால், சீன நீர்மூழ்கிகளின் தொடர்ச்சியான கொழும்பு வருகை புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது, ஆனால், தீவிரமாக அல்ல என்று, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரக் கலந்துரையாடல்களில் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியான கேணல் ஹரிகரன், சிறிலங்கா துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி தரித்து நிற்கும் பிந்திய நிலவரங்கள் குறித்து இந்தியா பல்வேறு காரணங்களுக்காக கவலை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

“முதல்முறையாக ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைக்காக இந்தியப் பெருங்கடல் பகுதியில், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் நீர்மூழ்கிகளும் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறையல்ல” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, திருகோணமலையில், விமானப் பராமரிப்பு தளம் ஒன்றை அமைக்க சீனாவுக்கு அனுமதியளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து ஏற்கனவே இந்தியா கவலை தெரிவித்ததையும் ரொய்ட்டர்ஸ் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *