மேலும்

கொழும்புத் துறைமுகத்தில் மீண்டும் சீன நீர்மூழ்கி – கருத்து வெளியிட மறுத்த இந்திய அதிகாரி

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனக் கடற்படையின் மற்றொரு நீர்மூழ்கியை கொழும்புத் துறைமுகத்துக்குள் சிறிலங்கா அனுமதித்திருப்பது இராஜதந்திர வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சீனக் கடற்படையின், சங்செங்- 2 வகை நீர்மூழ்கியும், சங்சிங்டாவோ என்ற போர்க்கப்பலும், வெள்ளிக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

இவை வரும் 6ம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று தெரியவந்துள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செப்ரெம்பர் மாதம், சீன அதிபர் கொழும்பு வருவதற்கு முன்னதாக, சீனக் கடற்படையின் சொங் வகை நீர்மூழ்கி கொழும்புத் துறைமுகத்தில் ஒருவார காலம் தரித்து நின்றது.

இதுகுறித்து சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா நேரடியாகவே கவலையை வெளியிட்டிருந்தது.

புதுடெல்லிக்கு அழைக்கப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகியோரிடம் இந்தியாவின் அதிருப்தி நேரடியாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுடெல்லியில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா கடற்படைத் தளபதி, இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் சிறிலங்கா விட்டுக் கொடுக்காது என்று உறுதியளித்திருந்தார்.

இந்தநிலையிலேயே மீண்டும் சீனக் கடற்படையின் நீர்மூழ்கியொன்று  கொழும்புத் துறைமுகம் வந்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரியவிடம் கேள்வி எழுப்பிய போது, இது வழக்கத்துக்கு மாறான ஒன்று அல்ல எனவும், கடந்த நான்கு ஆண்டுகளில் 200இற்கு அதிகமான வெளிநாட்டுப் போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிகளும், நல்லெண்ணப் பயணமாகவும், எரிபொருள் நிரப்பவும் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாலுமிகள் இளைப்பாறுவதற்கும், எரிபொருள் நிரப்பவுமே சீன நீர்மூழ்கி, கொழும்பு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர், எந்த துறைமுகத்தில் இருந்து இந்த நீர்மூழ்கி வந்தது என்றோ, அடுத்த எங்கு செல்லப் போகிறது என்றோ தகவல் வெளியிட முடியாது என்றும், அது கடற்படை இராஜதந்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு கப்பல்களிலும் எத்தனை சீன மாலுமிகள் வந்துள்ளனர் என்ற விபரமும் தம்மிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது, அணுசக்தி நீர்மூழ்கியல்ல எனவும், டீசல் மற்றும் மின்கலனில் இயங்கும் நீர்மூழ்கியே என்றும் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
சீனாவின் தலையீட்டை இந்தியா நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சீன நீர்மூழ்கியின் கொழும்பு வருகை தொடர்பாக, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் பிரகாஸ் கோபாலன் கருத்து எதையும் வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *