மேலும்

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் கூட்டுப்பயிற்சி நாளை ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், இருநாட்டு சிறப்புப் படைப்பிரிவுகளும் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி ஒன்று நாளை (நவம்பர் 3ம் நாள்) ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஊவா குடாஓயாவில் உள்ள கொமாண்டோ படைப்பிரிவின் பயிற்சி பாடசாலையில், திங்கட்கிழமை ஆரம்பமாகும் இந்தப் பயிற்சியில் இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 42 படையினர் பங்கேற்கவுள்ளனர்.

‘மித்ர‘ சக்தி பயிற்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் போர்ப்பயிற்சியில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவு கொமாண்டோக்களுடன் கடற்படையினரும், விமானப்படையினரும் பங்கேற்கவுள்ளனர்.

கடந்த மாத ஆரம்பத்தில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்புச் செயலர் ஆர்,கே. மாத்தூர் தலைமையிலான குழுவினருக்கும், கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான இலங்கைக் குழுவுக்கும் இடையில் நடத்தப்பட்ட வருடாந்த பாதுகாப்புக் கலந்துரையாடலை அடுத்தே, இந்த போர்ப்பயிற்சிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட ஆலோசனையை இந்திய இராணுவமே முன்வைத்திருந்தது.

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிறப்புப் படைப்பிரிவு மற்றும் கொமாண்டோப் படைப்பிரிவைச் சேர்ந்த 168 அதிகாரிகள் மற்றும் படையினரும், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் 16 பேரும், சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் 16 பேரும், இந்திய இராணுவத்தின் சிறப்புப் படையினர் 42 பேருடன் இணைந்து இந்தப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

வரும் 3ம் நாள் ஆரம்பமாகி, நவம்பர் 23ம் நாள் வரை இந்தப் போர்ப்பயிற்சி மூன்று வாரங்கள் இடம்பெறும்.

இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு, கடந்த வெள்ளிக்கிழமை, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கப்டன் பிரகாஸ் கோபாலனும், சிறிலங்கா இராணுவத்தின் பயிற்சிப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜெயந்த குணரத்னவும் கையெழுத்திட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *