மேலும்

மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரியின் கடிதம் – (முழுமையாக)

mahinda-maithriஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை வழங்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று எழுதிய 5 பக்க கடிதத்தின் முழுமையான விபரம்-

இரண்டு பத்தாண்டுகளாக நான்கு அதிபர் தேர்தல்கள் மற்றும் நான்கு  நாடாளுமன்ற தேர்தல்களை வெற்றிகொண்டசிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி கடந்த அதிபர் தேர்தலில் உங்கள் தலைமையில் தோல்வியடைந்தது. தேர்தலின் பின்னர் 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.

உங்களைப் போன்றே நானும் அரசியலில் சுதந்திரக்கட்சியின் ஊடாக கால்பதித்தேன். நீங்கள் இரண்டு முறை இந்த நாட்டில் நிறைவேற்று அதிபராக பதவி வகித்தீர்கள். சுதந்திரக்கட்சியின் ஊடாகவே இதனை உங்களால் அடையமுடிந்தது.

ஆனால் நான் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிமுகமாகியே அதிபராக பதவி பெற்றுள்ளேன். உங்களுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் காணப்பட்ட மக்களின் கருத்தை ஒன்றிணைத்து அதிபர் பதவியை மீண்டும் கட்சிக்குள்ளேயே வைத்துக் கொண்டுள்ளோம்.

எனினும் எனக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையிலான பிணைப்பு மிகவும் பலமானது. தேர்தல் தோல்வி என்பது இனிமையான அனுபவமாக இருக்காது.

எனினும் கடந்த அதிபர் தேர்தல் தோல்வியின் பின்னர் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் 1977 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தோல்விகளைப் போன்ற முட்கள் நிறைந்த அனுபவத்தை பெறவில்லை.

காரணம் சுதந்திரக் கட்சியில் 48 ஆண்டுகள் அங்கம் வகித்து 13 ஆண்டுகள் பொதுச்செயலராக இருந்த நான் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையே இதற்கு காரணமாகும்.

ஒருவேளை மைத்திரிபால சிறிசேன அன்றி வேறுயாராவது பொதுவேட்பாளராக வெற்றி பெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

எனது வெற்றியின் பின்னர் நான் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைஉறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அனைவரையும் பாதுகாத்தேன்.

நான் ஜனவரி 8 ஆம் நாள் வெற்றிபெற்றவுடன்  நாடாளுமன்றத்தை கலைத்திருந்தால், சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் என்ன நடந்திருக்குமென எண்ணிப்பார்க்க முடியாது.

2005 ஆம் ஆண்டு நீங்கள் அதிபராகும் வரை கடந்துவந்த தீர்க்கமான பயணங்களில் நான் உங்களுக்காக முன்னின்றேன் என்பதை மறக்கமுடியுமா?

2004 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் உங்களை பிரதமராக நியமிப்பதற்கு நான் எடுத்த முயற்சிகள் எவ்வாறானதென்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். அன்று உங்களை பிரதமராக்க விடாமல் ஜேவிபியின் விமல் வீரவன்ச முன்னெடுத்த செயற்பாடுகளுக்கு எதிராக நான் உங்களுக்காக முன்னின்றேன்.

2005 ஆம் ஆண்டு உங்களை அதிபர் வேட்பாளராக நியமிக்கும் செயற்பாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் போது உங்களுக்காக முன்னின்றேன்.

எனினும் இன்று உங்களிடமிருக்கின்ற பலர் 2005 ஆம் ஆண்டு நீங்கள் அதிபர் தேர்தலில் தோற்றிருந்தால் ஐ.தே.க.வுடன் இணைவதற்கு தயாராகவிருந்தனர்.

சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களான எனக்கும் உங்களுக்குமிடையிலான நீண்டகால அரசியல் உறவு பாதிப்படைந்தமைக்கு பசில் ராஜபக்சவின் செயற்பாடுகள் காரணமாக அமைந்தன என்பது உங்களுக்கு தெரிந்த விடயம்.

மைத்திரிபாலவுக்கு எதிரான கொள்கையொன்றை பசில் பின்பற்றி என்னை தோல்வியடைந்த அரசியல்வாதியாக காட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் இறுதியில் உங்கள் குடும்பமே தோல்வியடைவதற்கு காரணமாக அமைந்தன.

பசில் ராஜபக்ச எனது அரசியலுக்கு தொடர்ச்சியாக தடைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் அந்த விடயத்தில் தலையிட்டு எனது சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு உங்களால் முடியும் என நான் எதிர்பார்த்தேன்.

எனினும் நான் எதிர்பார்த்த நேர்மைத்தன்மையை நீங்கள் 2014 நவம்பர் 21 ஆம் நாள் வரை வெளிக்காட்டவில்லை.

கடந்த ஏழு மாதங்களில் நான் உங்களை மூன்று தடவைகள் சந்தித்தேன்.

நீங்கள் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கைச்சாத்திடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் என்னுடன் தொலைபேசியில் உரையாடினீர்கள்.

அனைத்து சந்திப்புக்களின் போதும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் தயாராகவிருப்பதாகவும் கூறினேன்.

எனினும் நீங்கள் வேட்புமனுவில் கைச்சாத்திட்டதும், சுதந்திரக்கட்சியின் தலைவரான எனது வகிபாகம் எதிர்பார்ப்பற்ற நிலைக்கு போனது.

நீங்கள் இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் விட்டிருந்தால் கடந்த தேர்தலில் என்னுடன் செயற்பட்ட தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு சுதந்திரக்கட்சியை பாரிய நம்பிக்கை பாதையில் கொண்டு சென்றிருப்பேன்.

தேர்தலில் நீங்கள் போட்டியிடக் கூடாது என நான் கூறியிருந்தாலும் அரசியலில் இருந்து உங்களை முழுமையாக அகற்றும் எண்ணம் எனக்கிருக்கவில்லை. உங்களுக்காக பொருத்தமான தகுதியான அரசியல் அமைப்பு ரீதியான ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நான் முன்வந்திருந்தேன்.

உங்கள் குடும்பத்தில் பலர் அதனை விரும்பியதாகவும் அறிந்தேன். எனினும் நீங்கள் அதனை நிராகரித்ததுடன் சுதந்திரக்கட்சி பற்றி சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக மட்டும். செயற்பட்டு வந்தீர்கள்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள சிறிய குழுவினர் உங்களிடமுள்ள வாக்கு பலத்தை பயன்படுத்தி அவர்கள்  நாடாளுமன்றம் செல்ல முயற்சிக்கின்றனர்.

64 ஆண்டு வரலாற்றைக் கொண்ட- 35 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்த சுதந்திரக் கட்சி ஒரு சிறிய குழுவினரின் குகைக்குள் சிக்கியது. அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்கவேண்டும்.

விருப்புவாக்கு பலமற்ற, அரசியல் எதிர்காலம் இல்லாத ஒரு சிறிய குழுவினரின் கைகளுக்கு கட்சியை ஒப்படைப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது.

1956 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சி இனரீதியான, மத ரீதியான ஆழம் நிறைந்த கட்சியென்ற ஒரு கருத்து நிலவிய போதும் அதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் சந்திரிகா குமாரதுங்கவும் கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கியபோது எமது கட்சியானது பல்லின, பலமத பிரதிநிதித்துவத்தைக் கொண்ட கட்சியென அடையாளப்படுத்தப்பட்டது.

எனினும் நீங்கள் சுதந்திரக்கட்சிக்கு தலைமை வழங்கிய கடந்த 9 ஆண்டுகளில் இலங்கையின் சமூக யதார்த்தமான பன்முகத்தன்மையை நிராகரித்த கட்சியாக சுதந்திரக்கட்சி உருவாகியுள்ளது.

ஜனவரி 8 ஆம் நாள் நீங்கள் அடைந்த தோல்விக்கு உங்களாலேயே உருவாக்கப்பட்ட இனவாதம் உங்களுக்கு எதிராக செயற்பட்டமை உங்களுக்கு தெரியாதா?

காரணம் சுதந்திரக்கட்சி சிங்கள பௌத்த மக்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக மாறியது. இவ்வாறான ஒரு அடிப்படைவாத நிலைமை சுதந்திரக்கட்சி போன்ற ஒரு மூத்த கட்சிக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது.

அதிலிருந்து மீள்வதற்கும் சுதந்திரக் கட்சியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்தான கட்சியாக மாற்றியமைப்பதற்குமான சவால் என்னிடம் உள்ளது.

எனினும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் இனவாதத்தை உருவாக்கி விருப்பு வாக்கினைப் பெற முயற்சிக்கும் ஒருகுழுவினர் அல்லவா?

இவர்கள் உண்மையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் அல்ல. அவர்களுக்குத் தேவையானவாறு கட்சியை இயக்குவதற்கு இடமளிக்க முடியாது.

நீங்கள் அதிபராக இருக்கும்போது இந்த நாட்டில் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என இனங்கள் இல்லை என அடிக்கடி கூறியிருந்தீர்கள்.

எனினும் கடந்த அதிபர் தேர்தல் முதல் ஓகஸ்ட் 12 ஆம் நாள் வரை நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களும் இனவாதத்தையே பரப்பினீர்கள்.

நான் வணங்கும் பௌத்த தர்மம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் இனவாதத்தை எதிர்க்கின்றன. அதனை அனுமதிக்கவில்லை.

மேலும் இந்த நாட்டில் தமிழ்,முஸ்லிம் குடிமக்கள் என்னில் பாரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். ஓகஸ்ட் 17 ஆம் நாள் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சியை நான் வழிநடத்தியிருந்தால் வரலாற்றில் எப்போதுமில்லாதவாறு நம்பிக்கையை எமது கட்சி பெற்றிருக்கும்.

21 ஆம் நூற்றாண்டின் சவால்களை வெல்வதற்காக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய சந்தர்ப்பத்தில் இனவாதத்தை உருவாக்குவதற்கு முயற்சிப்பது கட்சிக்கும் நாட்டுக்கும் செய்யும் துரோகமாகும்.

வேட்புமனு வழங்கும் செயற்பாட்டில் கட்சியின் தலைவராகவும் எனக்கு ஒரு சவால் காணப்பட்டது. அதாவது இந்த மிகப்பெரிய சுதந்திரக்கட்சியை உடைத்து விடக்கூடாது என நான் சிந்தித்தேன்.

இரண்டு கட்சி கலாசாரமுடைய எமது நாட்டில் ஒரு கட்சி பலவீனமடைந்து வீட்டால் அதனால் ஏற்படும் நிலைமை என்னவென்று எனக்கு தெரியும். எனவே எந்தவொரு காரணத்திற்காகவும் சுதந்திரக்கட்சியை இரண்டாக உடைவதற்கு இடமளிக்கமுடியாது.

எனினும் நீங்கள் சுதந்திரக் கட்சியை உடைத்துக் கொண்டு தனித்து வேட்புமனு தாக்கல் செய்ய தயாராகியமையால் கட்சியின் எதிர்காலத்தை நினைத்து நான் எனது பக்கத்தில் பின்னடைவுக்குச் சென்றேன்.

கம்பகா மாவட்டத்தில் ரணதுங்க குடும்பத்தில் மூவருக்கு சுதந்திரக் கட்சியில் வேட்புமனு கொடுப்பது யதார்த்தமல்ல என்ற நிலையில் மேல்மாகாண முதலமைச்சர் தனது வேட்புமனுவை நீக்கிக்கொள்வார் என எதிர்பார்த்தேன்.

எனினும் முதலமைச்சருக்கு வேட்புமனு கிடைக்காவிடின் நீங்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக கூறியிருந்தீர்கள்.

அதனால் ரணதுங்க குடும்பத்தில் ஒருவர் கட்சியை விட்டு விலகி ஐ.தே.க.வுடன் இணைந்தபோது உங்களுக்கு வெற்றியைக் கொடுத்துவிட்டு நான் மௌனமாக இருந்தேன்.

ஒருவருக்கு வழங்கப்படும் வேட்புமனு விவகாரத்தினால் கட்சி பிளவுபடாமல் தடுப்பதற்காக உபாய ரீதியாக நான் பின்னடைவுக்குச் சென்றமை ஒற்றுமைக்கு வலுவாக அமைந்தது.

தேசிய அரசாங்க யோசனை என்பது எனது தனிப்பட்ட யோசனை அல்ல. அதற்கு சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவும்  நாடாளுமன்ற குழுவும் முழு அனுமதியை வழங்கியது. அதன் அடிப்படையிலேயே தேசிய அரசாங்கம் அமைந்தது.

சுதந்திரக்கட்சியினருக்கு அமைச்சுப் பதவிகளும் கிடைத்தன. எனினும் அவ்வாறு அமைச்சுப் பதவிகளை பெற்றவர்களை உங்கள் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். இது விருப்புவாக்கு சண்டையாகும்.

இது தொடர்பில் நான் அறிந்த உண்மைக் கதையை கூறவேண்டும்.

உங்களுக்குள் எஞ்சியிருக்கும் இறுதி அரசியல் இரத்தத்துளியையும் உறிஞ்சி அருந்துவதற்கு உங்களை சுற்றியுள்ளவர்கள் முயற்சிக்கின்றனர். உங்களின் பண்புகளைப் பாடிக்கொண்டிருக்கும் இந்த குழுவினர் எனக்கு இரகசிய தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியும் தூது அனுப்பியும் பொதுத் தேர்தலின் பின்னர் என்னுடன் அரசியல் செய்வதற்கு தயாராகவுள்ளதாக கூறிவருகின்றனர்.

அவர்களுக்கு எதாவது ஒரு அமைச்சுப் பதவியை தரும்படி கோருகின்றனர். இவ்வாறு சந்தர்ப்பவாதியாக செயற்படும் இவர்கள் உங்களுக்கு ஆதரவு போன்று உங்களுடன் நிற்கின்றனர்.

கட்சிக்குள் பிரிவு இருப்பதாக காட்டும் அவர்கள் பொதுத்தேர்தலுக்காக என்னுடைய புகைப்படத்தை பரப்புரைக்காக பயன்படுத்தும் விதத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

உங்களையும் உங்களது பெயரையும் உங்களது புகழையும் கொள்ளையடிக்கும் இந்த விருப்பு வாக்கு கொள்ளையர்கள் தொடர்ந்தும் இருந்தால் ஐ.ம.சு.மு.வின் தோல்வி நிச்சயமாகி விடும்.

நீங்கள் என்னுடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவிக்கும் செய்தியொன்றை அண்மையில் ஊடகத்தில் பார்த்தேன். உங்களுக்கு அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பு இருந்தால் நான் உங்களுக்கு ஒருவிடயத்தை கட்டாயம் கூறியே ஆகவேண்டும்.

உங்களினால் தான்தோன்றித்தனமாக நிறைவேற்றப்பட்ட 18 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் காரணமாக நாட்டினதும் மக்களினதும் ஜனாநாயக சுதந்திரம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.

அது மட்டுமன்றி சுதந்திரக்கட்சியின் உயிரும் உயிரான சமூக ஜனநாயக முகமும் கட்டுடைந்து போனது. நிரந்தரமாக அதிபர் பதவியில் நீடிப்பதற்காக நீங்கள் மக்களின் சுதந்திரத்தையும் அபிமானத்தையும் கட்சியினதும் கட்சியின் மூத்த உறுப்பினர்களின் எதிர்காலத்தை பறித்திருந்தீர்கள்.

உங்களுக்கு முன் இருந்த அதிபர்கள் செய்ததை போன்று நீங்களும் இரண்டு தடவை பதவிக்குப் பின்னர் ஓய்வு பெற்றிருந்தால் எமது கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் அதிபராகவும் மற்றொருவர் பிரதமராகவும் பதவி பெற சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

எனினும் தற்போதும் பொதுத்தேர்தலின் பின்னர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை தட்டிப்பறிப்பதற்கு நீங்கள் முயற்சிப்பது தெளிவாகிறது. அவர்களுக்கு தற்போதாவது உரிய இடம் கிடைக்க வேண்டாமா?

எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் அமைப்பதற்கான குறைந்தபட்ச தேவையான 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றால் இதுவரை பிரதமர் பதவியை பெறமுடியாத சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரே பிரதமராக வேண்டும் என நான் நம்புகிறேன்.

ஒருவேளை 113 ஆசனங்களைப் பெறமுடியாமல் அதற்கு அண்மித்த ஒரு எண்ணிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  பெற்றால் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான எஞ்சிய ஆசனங்களைப் பெறுவதற்கான தலையீட்டை நிறைவேற்று அதிபர் என்ற வகையில் நான் மேற்கொள்வேன்.

அப்போதும் கூட பிரதமராக உங்களை பிரதமராக நியமிக்கமாட்டேன். கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரே பிரதமராக பதவிபெறவேண்டும்.

பிரதமர் பதவியைப் பெறுவதற்கான அனுபவமுள்ள அரசியல் தூரநோக்கு கொண்ட பல தலைவர்களைக் கொண்ட ஒரே கட்சி சுதந்திரக்கட்சியாகும்.

குறிப்பாக நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனிவிரத்ன, சமல் ராஜபக்ச அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி, சுசில் பிரேமஜயந்த அனுர பிரியதர்சன யாப்பா போன்ற மூத்த உறுப்பினர்களில் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு உங்கள் ஆதரவையும் நெகிழ்வுத்தன்மையையும் தியாகத்தன்மையைும் ஆசிர்வாதத்தையும் வெளிக்காட்ட வேண்டும் என நாட்டினதும் மக்களினதும் சார்பாக கோரி நிற்கின்றேன்.

கடந்த ஜனவரி 8 ஆம் நாள் தோல்வியுற்றத்தில் இருந்து இன்று வரை நீங்கள் விகாரைகளுக்கு சென்றதும் அதற்கு ஊடக விளம்பரத்தைப் பெற்றதும் ஆச்சரியமானதாகும். காரணம் 2010 ஜனவரி 26 ஆம் நாளில் இருந்ர் 2014 நவம்பர் 21 ஆம் நாள் வரை நீங்கள் எவ்வாறு செயற்பட்டிர்கள் என எனக்குத் தெரியும்.

நீங்கள் கட்சி மட்டத்தில் நடத்தும் கலந்துரையாடல்களில் வைராக்கியம், குரோதம் போன்றவற்றையே நீங்கள் வெளிப்படுத்துவீர்கள் என கூறப்படுவது உண்டு.

எனவே எதிர்வரும் தேர்தல் நாள் வரை இதயத்தினாலன்று புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுமாறும் இனவாதத்தை பரப்பும் கூற்றை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடிய ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *