மேலும்

வல்லுநர்கள் குழுவின் சட்ட வரைவை தூக்கி வீசிய சிறிலங்கா அமைச்சரவை

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்,  வல்லுநர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவில் இருந்து வேறுபட்டது என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அதனை ஒப்புக் கொண்டார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் எழுப்பிய கவலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், குறிப்பிட்டதுடன்,  இறுதிச் சட்டமூலத்தில் பிணை வழங்குவது உட்பட பல விதிகள் வல்லுநர்கள் குழுவால் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த  அமைச்சர் விஜித ஹேரத்,

வல்லுநர்கள் குழு உறுப்பினர்களின் மாறுபட்ட கருத்துகளை இந்த சட்ட வரைவு பிரதிபலித்தது.

அமைச்சரவை கூடுதல் முன்மொழிவுகள் மற்றும் திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வல்லுநர்கள் குழுவின் வரைவை அதன் உண்மையான வடிவில் ஏற்க வேண்டிய கட்டாயம் அமைச்சரவைக்கு இல்லை.

ஒரு குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவை மாற்றுவது வழக்கமான நடைமுறையாகும்.

அதன் அசல் வடிவில் வரைவை ஏற்றுக்கொள்வது கட்டாயமில்லை. செயல்முறையை எளிதாக்க ஒரு குழு நியமிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தின் போது சட்டமூலத்தை இன்னமும் திருத்த முடியும்.

இந்த சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்றமும் சட்டம் குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *