‘கறுப்பு ஜூலை’ குறித்த உண்மையைக் கண்டறிய அதிபர் ஆணைக்குழு
1983-ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிய, அதிபர் ஆணைக்குழுவொன்றை நியமிக்க கோரும் தனிநபர் தீர்மானத்தை, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்வைத்துள்ளார்.
நேற்று அவர் நாடாளுமன்றத்தில் முன்வைத்த அந்த தீர்மானத்தில், கறுப்பு ஜூலை வன்முறைகளால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும், இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வகுக்கவும், அதிபர் விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
1983-ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’யின் போதும், வெலிக்கடை சிறைச்சாலையிலும் நடந்த இன மோதல்கள், வன்முறை மற்றும் படுகொலைகள் நாட்டின் தேசிய ஒற்றுமை, சமூகக் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மோதல்கள் மற்றும் வன்முறைச் செயல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்தனர், அதே நேரத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க சொத்துக்கள் தீவைப்பு மூலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் நடந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட போதிலும், இந்த மோதல்களையும் வன்முறைச் செயல்களையும் அரங்கேற்றிய குற்றவாளிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
மேலும், நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் சொத்து சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு விரிவான அல்லது சுதந்திரமான விசாரணையும் நடத்தப்படவில்லை.
நாட்டில் இதுபோன்ற இன மோதல்களும் வன்முறைகளும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், அனைத்து இன சமூகங்களிடையேயும் நீடித்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கும், மேற்கூறிய வன்முறை தொடர்பான உண்மையைக் கண்டறியவும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும், இதுபோன்ற இன வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஒரு அதிபர் விசாரணை ஆணையத்தை நியமிக்க இந்த நாடாளுமன்றம் பரிந்துரைக்கிறது என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
