மேலும்

பயங்கரவாத குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலமே கையாளப்பட வேண்டும்

1979ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்,  பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலம் கையாளப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நீதி அமைச்சினால் அரசிதழில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து, நீதி  அமைச்சருக்கு,  ஆணைக்குழு அனுப்பியுள்ள பரிந்துரைகள் அடங்கிய கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதத்தைக் கையாளும் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பால் உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கும் சிறிலங்காவின் அனைத்துலக மனித உரிமைக் கடமைகளுக்கும் இணக்கமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தில், பயங்கரவாதத்திற்கான வரையறையை மேலும் சுருக்கவும், தடுப்புக்காவல் மீது நீதித்துறை மேற்பார்வை வழங்கவும், பிணை வழங்குவதற்கு அர்த்தமுள்ள நீதித்துறை அதிகாரம் வழங்கவும், சட்ட ஆலோசனையை உடனடியாகப் பெறவும், நீதிபதியிடம் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னர் சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெறவும், மற்றும் முன்மொழியப்பட்ட சுயாதீன மறுஆய்வுக் குழுவின் சுதந்திரத்தை வலுப்படுத்தவும், சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

சட்டமூலத்தின் குறிப்பிட்ட விதிகள் குறித்த விரிவான கருத்துக்களைச் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, முன்மொழியப்பட்ட சட்டத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இந்தப் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளுமாறும் நீதியமைச்சிடம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *