சிவாஜிலிங்கம் உடல் தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் இன்று மதியம் தீயுடன் சங்கமமானது.
உடல் நலன் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்றுமுன்தினம் இரவு காலமாகிய நிலையில், நேற்று முதல் வல்வெட்டித்துறையில் உள்ள இல்லத்தில் அவருக்கு பெருமளவிலான பொதுமக்களும், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றதை அடுத்து, காலை 10 மணியளவில் அவரது உடல் வாகனப் பேரணியாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதையடுத்து, வல்வெட்டித்துறை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுப் பந்தலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து, அஞ்சலிக் கூட்டம் இடம்பெற்றதை அடுத்து, வல்வெட்டித்துறை ஊறணி மயானத்திற்கு எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.கே.சிவஞானம், செல்வம் அடைக்கலநாதன், வீ. ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், முருகேசு சந்திரகுமார், பொ. ஐங்கரநேசன், என்.சிறீகாந்தா, உள்ளிட்டவர்களும், இதொகா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய சோசலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்ட பெருமளவு அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான மக்களும் சிவாஜிலிங்கம் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் இருந்து இன்று காலை விமான மூலம் வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும், மறைந்த சிவாஜிலிங்கம் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.









