சிறிலங்கா காவல்துறைக்கு கனடிய காவல்துறையை ஒத்த சீருடை
சிறிலங்கா காவல்துறைக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சீருடை, கனடிய காவல்துறையின் சீருடையை ஒத்திருப்பதாக சிறிலங்கா காவல்துறையின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2027-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, 2027 ஜூன் மாதம் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்ட புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
நாட்டின் காலநிலைக்கு ஏற்ற வகையில் இந்த புதிய சீருடை வடிவமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிடப்பட்டிருந்தார்.
தற்போது, சிறிலங்கா காவல்துறை காலனித்துவ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காக்கி நிற சீருடையை பயன்படுத்தி வருகிறது; இதில் மேற்சட்டை, தடிப்பான காற்சட்டைத் துணியால் தைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொள்ளும்போது, இத்தகைய தடிப்பான துணியாலான சீருடையை அணிவது கடமையில் இருக்கும் அதிகாரிகளுக்கு மிகுந்த உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்ற கவலை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, ”காவல்துறை சீருடையை மாற்றும் அதிகாரம் சிறிலங்கா அதிபரிடமே உள்ளது; அந்தச் செயல்முறை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
புதிய சீருடைக்காகப் பல வண்ணக் கலவைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் கனடிய காவல்துறையினர் அணியும் சீருடையைப் போன்றே, சாம்பல் நிற மேற்சட்டை மற்றும் நீல நிற காற்சட்டை ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கே தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
