நீதிவான் பயன்படுத்தும் வாயில் வழியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்த சந்தேக நபர்
சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், நீதிமன்றத்திற்குள் நீதிவானுக்காக ஒதுக்கப்பட்ட நுழைவாயில் வழியாக நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை அனுராதபுரம் நீதிவான் முன் விசாரணைக்கு வந்த போது, பல்லேகம ஹேமரத்ன தேரர், அதிபர் சட்டவாளர் காலிங்க இந்ததிஸ்ஸவின் வாகனத்தில் நீதிமன்றம் வந்துள்ளார்.
சந்தேக நபரான பௌத்த பிக்கு, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய நீதிவானுக்காக ஒதுக்கப்பட்ட நுழைவாயிலைப் பயன்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து நீதிவானிடம் முறையிடப்பட்டதை அடுத்து, நீதிமன்ற வளாகத்திற்குள் பௌத்த பிக்கு எவ்வாறு நுழைந்தார் என்பது குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றப் பாதுகாப்புப் பொறுப்பு அதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
முந்தைய விசாரணையின் போதும் இதேபோன்று சட்டவாளரின் வாகனத்தில் வந்து நீதிபதியின் நுழைவாயில் வழியாக நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
