காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி- இறுதிக்கட்டத்தில் இந்தியாவுடனான பேச்சுக்கள்
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான, இந்திய அரசாங்கத்துடனான பேச்சுக்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
“இந்த திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாடு இன்னமும் பேச்சுவார்த்தையில் உள்ளது.
இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
நாங்கள் நிபந்தனைகள் மற்றும் இணக்கப்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி, சில கருத்துருக்களைப் பெற்றுள்ளோம்.
அந்தக் கருத்துருக்களுக்கு இணங்கி, அவற்றை இந்திய தூதரகத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.
புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கு முன்னர் நிபந்தனைகளைச் சரிபார்ப்பது போன்ற பணிகள் நடைபெற வேண்டும், அவை தற்போது நடைபெற்று வருகின்றன.
இருப்பினும், இந்தத் திட்டத்திற்கான தேவையான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
சாத்தியக்கூறு ஆய்வுகளும் வடிவமைப்பும் மேற்கொள்ளப்பட்டு, பல முடிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இப்போது, நாம் செய்ய வேண்டியதெல்லாம் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டு, கொடையைப் பெற்று, பணியைத் தொடங்குவதுதான்.
இந்த திட்டத்திற்காக 60 மில்லியன் டொலர் கொடையை வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்த கொடையை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம், திட்டத்தின் உரிமை என்னவாக இருக்கும், மற்றும் நாம் எத்தகைய கூட்டாண்மையில் ஈடுபடப் போகிறோம் என்பது குறித்து இப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன, என்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்குமேலும் கூறியுள்ளார்.
