மகிந்த சமரசிங்க பதவி விலகுவதாக அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகுவதாக, மகிந்த சமரசிங்க, அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் அறிவித்துள்ளார் என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மகிந்த சமரசிங்கவின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாத இறுதியில் முடிவடையவுள்ள நிலையில், தூதுவர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக ஞாயிறு திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக அவரது சேவைகளைப் பெறுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசியலில் பல பத்தாண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராகப் பணியாற்றிய மகிந்த சமரசிங்க, 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலிருந்து விலகி, அமெரிக்காவுக்கான தூதுவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்த காலகட்டத்தில் அவர் இராஜதந்திர ரீதியாக பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்.
