கூடுதல் சந்தை வாய்ப்பு தராவிட்டால் முதலீடு இல்லை- சினோபெக் திட்டவட்டம்
உள்ளூரில் கூடுதல் சந்தை வாய்ப்பு அளிக்கப்படாவிட்டால், 3.7 பில்லியன் டொலர் மதிப்பிலான அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தை சினோபெக் நிறுவனம் முன்னெடுக்காது என்று சீனா அறிவித்துள்ளது.
உற்பத்தி செய்யப்படும் எண்ணெயில், 80% ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் மற்றும் 20% உள்ளூர் சந்தையில் விற்கப்பட வேண்டும் என ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, சினோபெக் இந்த திட்டத்தைத் தொடர முடியாது என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சீனா தெரிவித்துள்ளதாக விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முழுமையாகச் செயற்படத் தொடங்கியதும், இந்த ஆலை ஒரு நாளைக்கு 200,000 பீப்பாய் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டிருக்கும்.
உற்பத்தியில் 30வீதத்தை உள்ளூரில் விற்க சீனத் தரப்பு எதிர்பார்ப்பதாகவும், இந்தத் திட்டத்தைத் தக்கவைக்க 20 வீத பங்கு போதுமானதல்ல என்று, அவர்கள் கருதுகின்றனர் என்றும், அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக, நிலக்கரி ஊழல் காரணமாக அண்மையில் பதவி விலகிய புண்யகுமார திசாநாயக்க, அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு ஆலை விவகாரத்தைக் கையாண்டிருந்தார்.
