எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உடன்பாட்டை இறுதி செய்ய வருகிறது சீன குழு
அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் திட்டத்திற்கான உடன்பாட்டை இறுதி செய்வதற்காக சீனாவின் சினோபெக் நிறுவனத்தின், உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத தொடக்கத்தில் சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
சிறிலங்கா அதிபராக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர், கடந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணத்தின் போது, 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில், அம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இதற்கமைய, சீன அரசுக்குச் சொந்தமான எரிசக்தி நிறுவனமான, சினோபெக், அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், உள்ளூர் சந்தையை அணுகுவது உள்ளிட்ட விடயங்களில் சினோபெக் நிறுவனம் உடன்பாட்டில் திருத்தங்களை கோரியதால், திட்டத்தை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அண்மையில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த உடன்பாடு கடந்த மாதம் இறுதி செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும், பின்னர், அது ஜனவரி வரை பிற்போடப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் உடன்பாட்டில் கையெழுத்திடும் வகையில், சினோபெக்கின், உயர்மட்டக் குழு பெப்ரவரி முதல் வாரத்தில் சிறிலங்காவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு இறுதி செய்யப்பட்டால், சினோபெக் நிறுவனம், சிறிலங்காவில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டைச் செய்யும்.
