இன்று வெளியேறும் ஜூலி சங் – பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell) பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் பொறுப்பேற்கும் வரை அவர் தூதரக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சுமார் 4 ஆண்டுகள் கொழும்பில் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றிய ஜூலி சங் இன்று நாட்டை விட்டு புறப்படுவதை முன்னிட்டு காணொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது பணிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியேறுவதற்கு முன்பாக, தற்போதைய அரசாங்க தலைவர்கள், முன்னாள் அதிபர்கள், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து விடைபெற்றுள்ளார்.
இதனிடையே அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நாட்டை விட்டு வெளியேறுவதை சாபத்தின் முடிவு என்றும், அதனை பால்சோறுடன் கொண்டாட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜூலி சங்கை சாபம் என்று வர்ணித்த அவர், அவரது வெளியேற்றம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்றும் கூறி, இன்று நடத்திய ஊடகச் சந்திப்பின் போது, பால்சோறும் பரிமாறியிருந்தார்.


