பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய எதிரிக்கு பிரிகேடியராக பதவி உயர்வு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்குடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, ஊடக சுதந்திர அமைப்புகளும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
லெப்டினன்ட் கேணல் எரந்த ரதீஷ் பீரிஸ் பிரிகேடியர் பதவிக்கு உயர்த்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்ததாகவும், 2010 ஆம் ஆண்டு தனது கணவன் காணாமல் ஆக்கப்பட்ட தொடர்பாக, நடந்து வரும் குற்றவியல் வழக்கில் அவர் ஒரு பிரதிவாதியாக இருப்பதாகவும், இந்த முடிவை கடுமையாக எதிர்ப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரிகளில் லெப்டினன்ட் கேணல் எரந்த ரதீஷ் பீரிஸும் ஒருவராவார்.
2019 ஆம் ஆண்டில் சட்டமா அதிபர் அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு உட்பட 17 குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்திருந்தார்
குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணைகளில், அவர் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அவருக்கு மூத்த பதவி வழங்குவது, நீதித்துறை செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் சந்தியா எக்னெலிகொட எச்சரித்துள்ளார்.
இந்தப் பதவி உயர்வு சாட்சிகளைப் பாதிக்கும், விசாரணை அதிகாரிகளை நம்பிக்கையிழக்கச் செய்யும், நீதி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவர், முக்கிய சாட்சி ஒருவரை அச்சுறுத்தியதாக மற்றொரு வழக்கு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பதவி உயர்வு, வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக்கூறல் குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை சேதப்படுத்துவதாகவும், சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திர அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
