ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை சிறையில் கேக் வெட்டி கொண்டாடிய பிள்ளையான்
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கேக் வெட்டி கொண்டாடியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் அப்போது பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவர் சிறைச்சாலைக்குள் இருந்து கொண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குண்டுதாரிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், 2019 ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதை அடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றதாக பதற்றமடைந்து காணப்பட்டனர்.
அப்போது பிள்ளையான், அது தீவிரவாத தாக்குதல் அல்ல, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்று திட்டவட்டமாக அவர்களிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் பிள்ளையான் சக சிறைக்கைதிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.