ஆட்கடத்தல் வழக்கிலேயே முன்னாள் கடற்படை புலனாய்வு பணிப்பாளர் கைது
2010ஆம் ஆண்டு இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்குத் தொடர்பாகவே, சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், ஓய்வுபெற்ற றியர் அட்மிரல் சரத் மொஹோற்றி கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
அளவ்வ பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞன் தொடர்பாக விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் மொஹோற்றியை நேற்று காலை விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
அவரிடம், கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் விசாரணை நடத்திய வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவரைக் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை நேற்றுமாலை, நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். இதன்போது, வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகத்தென்ன கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்து கொண்ட, றியர் அட்மிரல், சரத் மொஹோற்றி, 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 2015 இல் ஓய்வு பெற்றார்.
