செம்மணிப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி கையெழுத்து போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரியும், புதைகுழி அகழ்வுப் பணிகளைச் சர்வதேச நிபுணத்துவப் பங்களிப்புடன் முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும்- தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புகள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இணைந்து இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை இடம்பெற்ற கையெழுத்து திரட்டும் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு நகரில் இன்று காலை, முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர், உறுப்பினர்கள், பங்குத்தந்தையர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா, இலுப்பையடியில் இடம்பெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாநகர முதல்வர் காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கையொப்பம் இட்டனர்.
மன்னாரில் இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.





