செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இன்று மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணம்- செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் மூன்றாவது அகழ்வுப் பணி இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வுப் பணிகள் குறித்து தகவல் வெளியிட்ட சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா,
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கிய நிலையில், கடந்த 06ஆம் திகதி வரை 32 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்ட போது, முதலாவது அகழ்வாய்வுத் தளத்தில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகளும், இரண்டாவது அகழ்வாய்வுத் தளத்தில் இருந்து 9 மனித எலும்புக்கூடுகளுமாக 150 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் 33ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்று இடம்பெற்றன.
ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை, ராடர் மூலம் இனங்காணப்பட்ட பகுதிகளில், மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

