கிழக்கு படுகொலைகள்- பிள்ளையானின் சகாக்கள் இருவர் நேற்றும் இன்றும் கைது
கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக, பிள்ளையான் மற்றும் இனியபாரதியின் சகாக்கள் இருவர், மட்டக்களப்பில் வைத்து நேற்றும் இன்றும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையானை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின், கிரான் பகுதியில் இயங்கி வந்த முகாமின் பொறுப்பாளராக இருந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை நேற்று மாலை கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதேவேளை, பிள்ளையானைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரது நெருங்கிய சகாவான இனியபாரதி எனப்படும் புஸ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீதரன் தவசீலன் ஆகியோர் கடந்த ஜுலை 6 ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இனியபாரதியுடன் சேர்ந்து இயங்கி வந்த அவரது நெருங்கிய சகாவான களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவரை, இன்று அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, கிழக்கு படுகொலைகள் குறித்த விசாரணைகளை அடுத்து, இதுவரையில், 8 பேர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
