சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேறக் கோரி பருத்தித்துறையில் போராட்டம்
சிறிலங்கா இராணுவத்தினரை வெளியேற்றக் கோரி, பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் இன்று காலை 8.30 மணியளவில், பருத்தித்துறை இறங்குதுறைப் பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று முன்னெடுக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
நீண்டகாலமாக சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள, பருத்தித்துறை அஞ்சலகம், முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்,
பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்புமிக்க வெளிச்ச வீட்டில் பல காலமாக இருக்கும் சிறிலங்கா இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்,
நூற்றாண்டு காலமாக இருக்கும் பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை காரணமாக இடம்மாற்றம் செய்யும் நோக்கம் காணப்படுவதால் இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்வேறு தமிழ்க் கட்சிகள் பங்கேற்ற போதும், தேசிய மக்கள் சக்தியினர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும் பேரணியில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சுமந்திரன், கஜேந்திரன், மற்றும் பருத்தித்துறை நகரசபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், சமத்துவக் கட்சியின் தலைவர் சந்திரகுமார், பருத்தித்துறை நகர வர்த்தகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கெடுத்திருந்தனர்.




