ரணில் ஆபத்தான நிலையில் இல்லை – மருத்துவர்கள் தகவல்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக இருப்பதாக, கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு தேசிய மருத்துவமனையின் செயற்பாட்டு பணிப்பாளர், மருத்துவர் பிரதீப் விஜேசிங்க,
“வயது மூப்பு காரணமாக, ரணில் விக்ரமசிங்கவின் இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை தீவிர சிசிக்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளோம். அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கிட்டத்தட்ட 13 மணிநேரம் உணவு, குடிநீர் இல்லாமல் இருந்ததால், நீரிழப்பு ஏற்பட்டு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்று மருத்துவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்தில் ரணில் விக்கிரமசிங்க கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் இருந்த பின்னர், கோட்டை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நீதிமன்ற அமர்வுகள் இரவு 10 மணிக்கு மேல் நடக்கும் வரை 13 மணிநேரத்திற்கு மேலாக உணவோ, குடிநீரோ அருந்தவில்லை.
இடையில், மின் தடை காரணமாக நீதிமன்றம் இருளில் மூழ்கியது.
உள்ளே இருந்தவர்கள் கடும் புழுக்கத்துக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கவும் நேரிட்டது.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது அழுத்தம் மற்றும் குளுக்கேஸ் அளவு அதிகரித்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
76 வயதான முன்னாள் அதிபர், நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
அங்குள்ள மருத்துவர்கள் இந்த நிலைமைகளுக்கு சிகிச்சையைத் தொடங்கினர்.
சனிக்கிழமை பிற்பகலுக்குள், இரத்த அழுத்தம் அல்லது குளுக்கோஸ் அளவுகள் குறையாத நிலையில், அவர் தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவர் முதலில் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

