ரணிலை மீட்க அரசியல் எதிரிகளும் ஒன்றிணைவு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்கப் போவதாக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து, நேற்று கொழும்பில் உள்ள அவரது செயலகத்தில், முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
முன்னாள் அதிபர்கள் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
அவர்கள், சட்டவாளர்கள் குழுவுடன் இணைந்து, ரணில் விக்ரமசிங்கவின் அடுத்த நீதிமன்ற விசாரணை, வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் வரை ஒரு கையாளுவதற்கான ஒருசெயல்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.
நேற்றைய கூட்டத்தில் விமல் வீரவன்ச, மனோ கணேசன், காவிந்த ஜெயவர்தன, அலி சப்ரி, ஹெக்டர் அப்புஹாமி, தயாசிறி ஜயசேகர மற்றும் மகிந்த அமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை பெறுவதற்கான சட்ட நடைமுறை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.
இன்று காலை அவர்கள் மீண்டும் சந்திக்கவுள்ளதுடன், அதன் பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு தங்கள் திட்டங்களை அறிவிக்கவுள்ளனர்.
இந்தக் குழு ஒரு ஊடக சந்திப்பையும் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
