ரோம் சட்டத்தில் சிறிலங்கா தற்போது இணையாது
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை சிறிலங்கா, தற்போது அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அறிக்கையில், ரோம் சட்டத்தில் சிறிலஙகா அரசாங்கம் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பிரதான கவனம் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்தில் உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மிகவும் நட்புரீதியான பயணத்தை மேற்கொண்டார், அவரது நடவடிக்கைகள் மிகவும் வெளிப்படையானவை.
அரசாங்கம் அவருடன் நெருக்கமாக பணியாற்றியது, மேலும் அதைத் தொடர்ந்து செய்து வருகிறது.
எங்கெல்லாம் கவலைகள் எழுப்பப்பட்டதோ, அங்கெல்லாம் அரசாங்கம் ஒத்துழைத்து நாட்டின் நலன்களுக்காக நேர்மறையான பதில்களை வழங்கியது.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம், ஆனால் அது அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நடக்க வேண்டும்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் மையமாக உள்ளது, ஆனால் உள்நாட்டு வழிமுறைகள் மூலம் தொடரப்படும்.
சட்டத்தை மீறியவர்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும், ஆனால் நாட்டில் சரியான நீதி வழிமுறைகள் மூலம். ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, இறையாண்மை கொண்ட நிறுவனங்கள் மூலம் பொறுப்புக்கூறல் தொடரப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
