6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது – மூவருக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு- முத்தையன்கட்டுக் குளம் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு, தாக்கப்பட்ட ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து 6 சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை இராணுவ முகாமுக்குப் பின்புறமாக உள்ள குளத்தில் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய குடும்பத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இரத்தக்காயங்களுடன், சடலம் காணப்பட்ட நிலையில், யாழ். போதனா மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட சிறிலங்கா காவல்துறையினர், 6 சிறிலங்கா இராணுவத்தினரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களில் மூன்று பேர் இன்று முல்லைத்தீவு நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.