புதிதாக 70 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பம்
சிறிலங்காவில் சுமார் 70 அரசியல் கட்சிகள் புதிய பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட பாதி முழுமையடையாதவை என்றும், முக்கிய விபரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.
தேவையான அனைத்து தகவல்களுடனும் கூடிய விண்ணப்பங்கள் ஆவண சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும் என்றும், அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தொடர்பான சர்ச்சைகள் உள்ளக ரீதியாக அல்லது சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜூன் 2 ஆம் திகதி நிலவரப்படி, அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகள் பொதுச் செயலாளர்கள் தொடர்பான சர்ச்சைகளை தீர்க்கவில்லை.
இலங்கை தமிழ் அரசு கட்சி , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஐக்கிய இலங்கை பொதுஜனக் கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபைக் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி , சிறிலங்கா சுதந்திரக் கட்சி , மற்றும் சிங்களீப தேசிய முன்னணி ஆகியவையே பொதுச்செயலாளர் தொடர்பான சர்ச்சையில் இருப்பதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.