இந்தியாவுடனான உடன்பாடுகளை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி
இந்தியாவுடன் சிறிலங்கா அண்மையில் கையெழுத்திட்ட ஏழு புரிந்துணர்வு உடன்பாடுகளை செல்லுபடியற்றவையாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்ய்பட்ட இரண்டு அடிப்படை உரிமைகள் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது.
கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட இரண்டு மனுதாரர்கள் இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமா அதிபர் மற்றும் பலர் இந்த மனுக்களில் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டிருந்தனர்.
நீதியரசர்கள் ஆசல வேங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று இந்த மனுக்களை பரசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு தேவையான எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் இந்த மனுக்கள் விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய விசாரணையின் போது, சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், புரிந்துணர்வு உடன்பாடுகள் அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுள்ளதாகவும், எனவே எந்த சட்ட விதிகளையும் மீறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் புரிந்துணர்வு உடன்பாடுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய எந்த சட்டப்பூர்வ தேவையும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையில், செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றும், குறிப்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டிருந்தன.