சிறிலங்கா நீதித்துறை வரலாற்றில் முதல் முறை
சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, மனிதப் புதைகுழியொன்றில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைகுழியில் இருந்து, நேற்று வரை 126 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், மேலும் விசாரணைகளைத் தொடர, அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஆனந்தராஜா வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி, பாடசாலைப் பை, வளையல்கள், குழந்தைகளுக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் ஒரு பால் போத்தல் போன்ற தடயப் பொருட்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரை அரியாலைச் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் காட்சிப்படுத்தப்படும்.
அதேவேளை இந்த அடையாளம் காணும் நடவடிக்கை நீதிமன்ற செயற்பாட்டிற்கு உட்பட்டது என்பதால், அதுகுறித்த விதிமுறைகளையும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.