மேலும்

ஜெனிவாவுக்கான கடிதத்தில் ஒப்பமிட தமிழ் அரசுக் கட்சி மறுப்பு

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.

வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையில், கொண்டு வரும் புதிய தீர்மானத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை வலியுறுத்தி, பேரவைக்கும் உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்ப தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் அரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து, அனுப்பிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு, தற்போதைய சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு புதிய கடிதத்தை வரைவதற்கு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி உள்ளிட்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அமைப்பு சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், தமிழ் அரசுக் கட்சி அதனை நிராகரித்திருந்தது.

எனினும், அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய ஜெனிவாவிற்கு அனுப்பவுள்ள கடிதத்தை தமிழ் அரசுக் கட்சிக்கு அனுப்பி, அவர்களின் கருத்துக்கள், திருத்தங்களையும் உள்வாங்கி, அவர்களின் கையொப்பங்களுடன் அதனை அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, தமிழ் அரசுக் கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இன்று அந்தக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

அதையடுத்து அந்தக் கடிதத்தில் தாங்கள் ஒப்பமிடுவதில்லை என தீர்மானித்திருப்பதாக, தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

தாங்கள் பொருத்தமான நேரத்தில் பொதுத்தமான வகையில், இந்த விடயத்தை ஜெனிவாவிற்கு கொண்டு செல்வோம் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *