ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலாம் – மகாநாயக்கர்களிடம் கோரிக்கை
ஒற்றையாட்சிக்கு விரோதமான கொள்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்பற்றுவதைத் தடுக்க, மகாநாயக்கர்களை தலையீடு செய்யுமாறு, போர்வீரர்கள் மற்றும் ஒற்றையாட்சியைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளின் கூட்டமைப்பு, கோரியுள்ளது.
கலாநிதி வசந்த பண்டார மற்றும் றியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்டவர்கள் அடங்கிய இந்தக் குழு, நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர்களைச் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்தள்ளது.
2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது தொடங்கப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான திட்டம் இன்னும் தொடர்வதாகவும், இது நாட்டின் ஒற்றையாட்சி நிலைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அந்தக் குழுவினர், மகாநாயக்கர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது உயிரைப் பணயம் வைத்து நாட்டிற்கு சேவை செய்தவர்களை குறிவைத்து, 2015 – 2019 நல்லாட்சி நிர்வாகத்தின் போது இயற்றப்பட்ட ஏழு சட்டங்கள், வெளிப்புற தலையீடுகளுக்கு உகந்த சூழலை எவ்வாறு உருவாக்கியது என்றும் இந்தக் குழுவினர் விளக்கிக் கூறியுள்ளனர்.
போரில் வென்ற சிறிலங்காவுக்கு எதிரான, ஒட்டுமொத்த திட்டத்திற்கு ஏற்ப, நடவடிக்கையை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவர இன்னும் இரண்டு சட்டங்கள் மட்டுமே இயற்றப்பட வேண்டும் என்றும் கூட்டுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் சிறிலங்காவுக்கு எதிரான திட்டத்தைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.