மேலும்

குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு படையினரைப் பயன்படுத்த வேண்டாம்- சிறிலங்கா கடற்படைத் தளபதி

Vice Admiral Ravindra Wijegunaratneகுறுகிய அரசியல் நோக்கங்களுக்கு சிறிலங்கா படையினரைப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி , ரவீந்திர விஜேகுணவர்த்தன கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

“நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதி ஒருவர் திடீரென இராணுவ புரட்சி ஒன்று தொடர்பில் கருத்து தெரிவித்தமையையிட்டு நாம் பெரும் அதிருப்தியில் இருக்கிறோம்.

இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுவோம், இராணுவத்தின் செயற்பாடுகள் எவ்வாறானவை என்பது தொடர்பில் மக்கள் பெரிதும் அறிந்திருப்பதில்லை, அதனால் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிக்கின்ற போது அவதானமாக இருக்க வேண்டும்.

சிறிலங்கா இராணுவம் உளரீதியாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்ற பரப்புரைகள் செய்யப்படுகின்றன. அவ்வாறான நிலையில் சிறிலங்கா இராணுவம் இல்லை.

முன்னர் சிறிலங்கா இராணுவத்துக்குக் கிடைக்காதிருந்தவற்றையும் தற்போது பெற்றுக்கொண்டுள்ளோம், அதனால் இராணுவத்தின் அதிகாரங்களையும் ஏனைய செயற்பாடுகளையும் பலப்படுத்தியும் உள்ளோம்,

சிறிலங்கா இராணுவத்தின் பலம் எந்த வித்திலும் குறையவில்லை . எவராலும் குறைக்கப்படவும் இல்லை.  முன்பைவிட தற்போது இராணுவத்தின் பலம் அதிகரித்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும்,

போர்க்காலத்தில் நூற்றுக்கணக்கான கி.மீற்றர்களுக்கு அப்பால் சென்ற ஆயுதக் கப்பல்களைத் தாக்கி அழித்து, தீவிரவாத அமைப்புக்களுக்குப் பதிலடி கொடுத்தவர்கள் நாங்கள்.

இத்தகைய ஆற்றல் உள்ள சிறிலங்கா இராணுவம் உளரீதியாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினால் அது வேடிக்கையானது.

எமது நாடு ஜனநாயக நாடு. அதனை உருவாக்கியவர்கள் இந்நாட்டு மக்கள். எனவே மக்களின் வாக்குகளால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை பாதுகாப்பதே இராணுவத்தின் கடமை. அதனைதான் இன்றுவரை சிறிலங்கா இராணுவம் செய்து வருகிறது,

இராணுவ சூழ்ச்சியை மேற்கொள்ளவோ அல்லது புரட்சியை ஏற்படுத்தவோ ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

போர் நிறைவடைந்த காலத்திலும் அதற்கு முன்னரான காலப்பகுதியிலும் தற்போதும் நாங்கள் அவ்வாறு சிந்தித்ததில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமை தோற்றம் பெறுவதற்கு இடமில்லை.

சிறிலங்கா இராணுவத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான ஒரு கருத்து வெளியானமை தொடர்பில் இராணுவம் அதிருப்பதியடைந்துள்ளது. குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் எம்மை பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்,

சிறிலங்கா இராணுவம் படிப்படியாக வலுவாகி வருகிறது. கப்பல் வழியே பயணித்து தீவுகளில் இறங்கி திட்டம் வகுத்து போரிடுவதற்கான புதிய படையணி ஒன்றை உருவாக்கி வருகிறோம். அதற்கான பயிற்சிகள் திருகோணமலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும் இரண்டு கப்பல் கடற்படையின் தேவைகளுக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவை இந்தியாவினால் தயாரிக்கப்படுகின்றன.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *