மேலும்

இந்தியாவைத் தாக்கி விட்டு சீனாவுக்குப் பறக்கிறார் மகிந்த

Mahinda-Rajapaksaஇந்தியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விட்டு சீனப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், பீஜிங்கிற்கான ஒருவார காலப் பயணத்தை, மகிந்த ராஜபக்ச இன்று ஆரம்பிக்கும் நிலையில், நேற்று கொழும்பில் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது அவர் இந்தியா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

“எனது ஆட்சிக்காலத்தில் புதுடெல்லி கடைப்பிடித்த அணுகுமுறையை விட, இப்போதைய அரசாங்கத்துடன் இந்தியா மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது.

கொழும்பில் சீன நீர்மூழ்கி தரித்து நின்ற போது இந்தியா சீற்றம் கொண்டது.

இந்தியப் பெருங்கடலுக்குள் தமது நீர்மூழ்கி நுழைவதற்கு முன்னர், பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு சீனா தகவல் கொடுத்தது, அது எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதற்கு பெரிதாக கதறினார்கள்.

பெருமளவு நிலத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சீனாவுக்கு கொடுக்கும் போது, இந்தியா மௌனமாக இருக்கிறது.

நீர்மூழ்கிகள் விவகாரத்தை பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டார்கள். இன்று, முழு துறைமுகமும் சீனாவுக்கு வழங்கப்படும் போது, இந்தியாவுக்கு பிரச்சினையில்லையா?

இராஜதந்திர உறவுகளில் உள்ள வேறுபாட்டையே இது காட்டுகிறது.

நாட்டையோ, நாட்டின் எந்தவொரு பிராந்தியத்தையோ அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு உதவியைப் பெறுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்பதனை எதிர்க்கிறேன்.

அம்பாந்தோட்டையில் உள்ள காணிகளை சீனாவுக்கும், திருகோணமலையில் உள்ள காணிகளை இந்தியாவுக்கும், கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. காய்கறிகள் உற்பத்திக்காக ஜப்பானுக்கு 1000 ஏக்கர் காணிகளை வழங்கவும் முயற்சிக்கிறார்கள்.

99 ஆண்டு குத்தகைக்கு காணிகளை வழங்குவதையும் நான் எதிர்க்கிறேன். 99 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் காணிகளை உங்களால் மீளப் பெறமுடியுமா? அது நடக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “இந்தியாவைத் தாக்கி விட்டு சீனாவுக்குப் பறக்கிறார் மகிந்த”

  1. gowrikanthan says:

    ஸ்ரீ லங்கா அரசும்- இந்திய மீனவர்களும் தொடர்பான பிரச்சனையில் இந்தியரசு “நிமிர் நிலை தன்மை இழந்து” வாடி வதங்கி நிற்பதற்கும் இக்கட்டுரையின் தகவலுக்கும் ஏதாவது தொடர்புகள் உண்டா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *