சிறிலங்காவின் கள அதிகாரிகளுக்கு 430 மின்சார உந்துருளிகளை வழங்குகிறது இந்தியா
சிறிலங்காவின் நீரியல் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் கள அதிகாரிகளுக்கு, இந்தியா 430 மின்சார உந்துருளிகளை வழங்கவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் மீன்வளம், நீர்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் பி. கே. கோலித கமல் ஜினதாச ஆகியோர் கையெழுத்திட்டனர்.
“இந்த புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ், சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம், சிறிலங்கா தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகமை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கள அதிகாரிகளுக்கு மின்சார உந்துருளிகளை வழங்குவதற்காக, இந்தியா 265 மில்லியன் ரூபாய் மானிய உதவியை வழங்கவுள்ளது” என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்த மின்சார உந்துருளிகளின் பயன்பாடு, மீன்வளத்துறை அதிகாரிகளின் செயல்பாட்டுத் திறன், செயல்திறன் மற்றும் கள மட்டத்திலான இருப்பை மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
கடற்றொழில் சமூகங்களுடன் விரைவாகத் தொடர்புகொண்டு பணியாற்றவும், சேவைகளை வேகப்படுத்தவும் வழிவகுப்பதன் மூலம், சிறிலங்கா முழுவதும் பொதுச் சேவைகளை மேம்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் நோக்கம் என்று அவர் மேலும் கூறினார்.
