மேலும்

ஈரானிய கப்பல்களுக்கு விநியோகம்- சிறிலங்கா கப்பல்களுக்கு அமெரிக்கா தடை

சிறிலங்காவின் தனித்துவ பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டிருந்த ஈரானியக் கப்பல்களுக்கு எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய நிறுவனங்களின் இரண்டு சிறிலங்கா  கப்பல்கள், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவினால் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கப்பல்கள், இனி எந்தவொரு வணிகக் கப்பலுக்கும் பொருட்களை வழங்க முடியாது என்று தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன், ஈரானியக் கப்பல்கள் குறித்த தகவல்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிடம் அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானியக் கப்பல்களில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருக்கலாம் என்றும், அவற்றில் அரிசி இருப்பு இருந்தாலும் காய்கறிகள் மற்றும் பிற பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இத்தகைய சூழலில் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் போது உள்ளூர் கப்பல் முகவர்கள் கவனமாக இருக்குமாறு, சிறிலங்கா துறைமுக அதிகாரசபை, வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகள் மற்றும் பொருட்களை வழங்கச் சென்று, அனைத்தையும் இழந்துவிட வேண்டாம் என்று உள்ளூர் கப்பல் முகவர்களுக்கு வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டதாகவும், கப்பல் நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்தத் தகவல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இரண்டாம் நிலைத் தடைகள்’ (Secondary sanctions) என்பது, தடைகளுக்கு உள்ளான ஒரு நாடு அல்லது அமைப்போடு வர்த்தகம் செய்யும் மூன்றாம் தரப்பு தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது வங்கிகள் மீது ஒரு அரசாங்கம் விதிக்கும் அபராதங்கள் அல்லது கட்டுப்பாடுகள் ஆகும்.

அத்தகைய தடைகள், சம்பந்தப்பட்ட நாடு அல்லது அமெரிக்காவுடன் நேரடித் தொடர்பில் இல்லாத வெளிநாட்டு தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கும் கூடப் பொருந்தக்கூடும்.

சிறிலங்காவின் தனித்துவ பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டுள்ள ஈரானிய எண்ணெய்  கப்பல்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் பிற சேவைகளை வழங்கும் உள்ளூர் நிறுவனங்கள் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும், இதன் விளைவாக ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும், அமெரிக்க அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *