மேலும்

சந்திப்பை ரத்துச் செய்யுமாறு சுவிஸ் தூதுவருக்கு சுமந்திரன் அழுத்தம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரியதை அடுத்து, அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இழுபறிக்குள்ளாகியுள்ளது.

சுவிஸ் அரசின்  ஏற்பாட்டில் வரும் 19ஆம் நாள் கொழும்பில் நடைபெறவிருந்த இந்தச் சந்திப்பை ரத்துச் செய்யுமாறு எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டிலான இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி  ஆகிய கட்சிகளும், சிவில் சமூகத்தின் சார்பில் மூத்த சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் ஒன்றுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய 15 வரையான சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு  இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பிற்குப் பதிலளித்த தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் கலந்துரையாடலில் பங்கேற்ற முடியாது என்றும், கட்சியின் பிரதிநிதியொருவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

இந்த நிலையில், அரசியல்தீர்வு குறித்து கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் நாள் தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக  சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்துள்ளமை  குறித்து சுவிஸ் தூதுவரிடம் அதிருப்தி வெளிப்படுத்திய எம்.ஏ.சுமந்திரன்,  19 ஆம் நாள் நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச் செய்யும்படி கோரியுள்ளார்.

இதையடுத்து குறித்த நாளில் சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அது பிற்போடப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தச் சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக  சுரேஷ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *