மேலும்

அமெரிக்கா பசுபிக் விண்வெளிப் படைகளின் குழு சிறிலங்கா பயணம்

ஹவாயைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் பசுபிக் விண்வெளிப் படைகளின் (Space Forces Pacific) பிரதிநிதிகள் குழு சிறிலங்காவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்டுள்ளது.

லெப்டினன்ட் கேணல் ஷும்பேய் புஜிமுரா (Shumpei Fujimura) தலைமையிலான, அமெரிக்க விண்வெளிப் படைத் தூதுக்குழுவை வரவேற்பதில் பெருமிதம் கொள்வதாகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம், வளர்ந்து வரும்  அமெரிக்க-சிறிலங்கா பாதுகாப்பு கூட்டாண்மையில் ஒரு புதிய எல்லையைத் திறக்கிறது என்றும், அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமெரிக்க பசுபிக் விண்வெளிப் படை கட்டளையகத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பிரிவுத் தலைவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும், லெப்டினன்ட் கேணல் ஷும்பேய் புஜிமுரா தலைமையிலான குழுவினர், கடந்த  19 ஆம் நாள் சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில்,  விமானப்படைத் தளபதி, எயர் மார்ஷல் பந்து எதிரிசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்தத் குழுவில் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் மத்யூ ஏ. ஹவுஸ், மேஜர் ஜோஷ் மக்அனலி, ஜேசன் ஹால் மற்றும் சாட் போலன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த சுமுகமான சந்திப்பின் போது, ​​சிறிலங்கா விமானப்படைக்கும் அமெரிக்க பசுபிக் விண்வெளிப் படை கட்டளையகத்திற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொழில்முறை ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த குழுவினரின் பயணம் சிறிலங்கா விமானப்படைக்கும் அமெரிக்க விண்வெளிப் படை பசுபிக் கட்டளைக்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் தொடர்ச்சியான தொழில்முறைப் பரிமாற்றங்கள், பயிற்சி வாய்ப்புகள் மற்றும் அறிவுப் பகிர்வு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியிருப்பதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க விண்வெளிப் படை பசுபிக் (SPACEPAC)  பாதுகாப்பு ஒத்துழைப்புத் தலைவர் லெப். கேணல் ஷும்பேய் புஜிமுரா தலைமையிலான குழுவினர்  21ஆம் நாள் சிறிலங்காவின் தெற்கு கடற்படைக் கட்டளைத் தலைமையகத்திற்கு சென்று, தெற்கு கடற்படைப் பகுதியின் பிரதிப் பகுதித் தளபதி கொமடோர் அருண வீரசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *