திலீபன் சிலை விவகாரம்- 14 பேரிடம் விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக முறைப்படியான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், திலீபன் உருவச் சிலை வைக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது சிறிலங்கா காவல்துறை நடவடிக்கை எடுக்ககாதது ஏன் என எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிரோதமாகும்.
1979-ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படியும், குறிப்பாக 27-ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு அரசிதழ் அறிவிப்பில் பிரசுரிக்கப்பட்ட உத்தரவின்படியும், சிறிலங்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவது சட்டவிரோதமாகும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிறிலங்கா காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் அல்லது பிற ஊடகங்கள் மூலம் பதிவிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
திலீபன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்பதை காவல்துறை நடத்திய விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் திலீபனின் சிலை நிறுவப்பட்டது தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தச் சிலையும், நிகழ்வின்போது காட்சிப்படுத்தப்பட்ட பிற பொருட்களும் வழக்கிற்கான சான்றாகப் பெறப்பட்டுள்ளன.
திலீபனின் சிலையை நிறுவுவதற்கு உதவிய நபர்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 14 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரின் அறிவுரைக்கு இணங்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பயங்கரவாதச் செயல்கள் அனுமதிக்கப்படாது. சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
