மேலும்

நீதிமன்றில் முன்னிலையாகாமல் நழுவும் கோட்டா- எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையில், முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையாவதை தவிர்த்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

லலித்குமார் மற்றும் குகன் ஆகியோர் காணமால் ஆக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு கட்டளையிட்டது.

எனினும், இந்த வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் வருவதற்கு தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி,  இழுத்தடித்து வருகிறார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதும், கோட்டபாய ராஜபக்ச மன்றில் முன்னிலையாகவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 06ஆம் நாளுக்குத் திகதியிட்டுள்ளது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதற்கு எதிராகவும்,  காணாமலாக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்ட கோரியும்,  யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது..

இந்தப் போராட்டத்தில், செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், மேலதிக அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமையை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்பை வென்றெடுப்போம் என்பன போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *