அமெரிக்க தூதுவருக்கு நாளை பிரமாண்டமான பிரியாவிடை விருந்து
கொழும்பில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், வரும் 16 ஆம் நாள் நாட்டை விட்டு வெளியேறவுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், பிரியாவிடை சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து விடைபெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்போது, அண்மைய பேரிடர் அவசரநிலையின் போது, அமெரிக்க வழங்கிய உதவிகளில் அவர் ஆற்றிய பங்கிற்கும், 2023 ஒக்டோபரில் அறுகம்குடாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விடுத்த எச்சரிக்கையை ரத்து செய்வதற்கு அவர் எடுத்த விரைவான நடவடிக்கைக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொழும்பில் பணியாற்றிய மிகவும் பிரபலமான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தான் என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க மற்றும் அனுரகுமார திசாநாயக்க ஆகிய மூன்று அதிபர்களின் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் இருக்கும் அரிய வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாக ஜூலி சங் இதன் போது கூறினார்.
கொழும்பில் தங்கியிருந்த காலத்தில் சர்ச்சைக்குரிய நபராக இருந்த ஜூலி சங், நாட்டை விட்டு் புறப்படுவதற்கு முன், நாளை அவருக்கு ஒரு பிரமாண்டமான பிரியாவிடை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் கலந்து கொள்வார்கள்.
