நாளை கொழும்பு வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
எதியோப்பியா, சோமாலியா, தன்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.
நாளை கொழும்பு வரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, செவ்வாய்க்கிழமை காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் காலை உணவு சந்திப்பை நடத்தவுள்ளார்.
துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சிறிலங்காவில் சீனத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் புதிய சீன முதலீடுகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்படும்.
சீன சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதை இலகுபடுத்தும் வகையில், கொழும்புக்கு கூடுதல் விமானங்களை இயக்குவதற்கும், சிறிலங்கா அரசாங்கம் சீனாவின் உதவியை நாடவுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக கொழும்பு வந்து சிறிலங்கா தலைவர்களைச் சந்தித்த சில வாரங்களுக்குள் சீன வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
