பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய இராணுவத் தளபதி பேச்சு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை அவரது பணியகத்தில் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
மேம்பட்ட தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் அறிவுசார் பகிர்வு முயற்சிகள் மற்றும் எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை துறைகளில் , சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் திவேதி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மனிதாபிமான உதவி, அனர்த்த மீட்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு முயற்சிகளில் தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பிராந்திய உறுதித்தன்மை, மீள்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் தயார்நிலையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்க கீழ் நிலை நடுத்தர மற்றும் மூத்த அதிகாரிகள் மட்டங்களிலும் பிணைப்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர சூழ்நிலைகளின் போது பொதுவான புரிதலை வளர்ப்பதற்காக, தேசிய அளவில் இருந்து தந்திரோபாய நிலை வரை, பேரிடர் முகாமைத்துவ பொறிமுறையை மேம்படுத்த கூட்டு பயிற்சி மற்றும் பரிமாற்ற திட்டங்களின் முக்கியத்துவத்தையும் இந்திய இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பு சிறிலங்காவுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் கூட்டாண்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
அதேவேளை, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவையும் நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
இதன்போது, இந்தியாவினால் சிறிலங்கா பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகளுக்கு சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் நன்றி தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும் சிறிலங்காவின் ஆர்வத்தையும் அவர் வெளியிட்டார்.
சிறிலங்காவுடன் நெருக்கமான மற்றும் நீடித்த பாதுகாப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை ஜெனரல் திவேதி மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சிறிலங்கா இராணுவத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தவும், நீடித்த ஈடுபாடு, விரிவாக்கப்பட்ட பயிற்சி வாய்ப்புகள் மற்றும் இரு நாட்டு இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் அதை மேலும் வலுப்படுத்தவும் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



