மன்னாரில் பொதுமக்களை தாக்கிய காவல்துறையினர் மீது விசாரணை நடத்தப்படாது
மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டம் நடத்திய பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சிறிலங்கா காவல்துறையினருக்கு எதிராக விசாரணை ஏதும் நடத்தப்படாது என, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வினீத் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மன்னாரில் காற்றாலைகள் அமைக்கப்படுவதை எதிர்க்கும் பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பல போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தவுள்ளனர்.
காவல்துறையினரின் கடமைக்குத் தடை விதித்ததாகவும் அமைதியைக் குலைத்ததாகவும் கூறப்படும் பல போராட்டக்காரர்கள் மீது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
காவல்துறையினருடனான மோதலின் போது, மூன்று போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரிக்கப்படமாட்டார்கள்.
போராட்டக்காரர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறலாம். ஆனால் இந்த அதிகாரிகள் தங்கள் கடமைகளையே செய்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.